இந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “குறித்த ஆணையகம், அனைத்து இருதரப்பு விடயங்களையும் மறு ஆய்வு செய்வதற்காக தவறாமல் கூடும்.
அதாவது எரிசக்தி, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, மனிதவளம், தொழிலாளர், நிதி, திறன்கள், கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கூட்டு ஆணையகம் செயற்படும்.
மேலும் இந்த ஆணையகம், இருநாடுகளின் சுகாதாரம், கல்வி, மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து, அவற்றை செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களுக்கும் பொருத்தமான தீர்வுகளை கூட்டு ஆணையகம் வழங்கும்.
அத்துடன் கூட்டு ஆணையகக் கூட்டத்திற்கு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் தலைமை வகிப்பார்கள் என இந்தியாவும் குவைத்தும் கடந்த வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது” என இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.