டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் அஸ்லான் கராட்சேவ் மற்றும் கர்பீன் முகுருசாவின் கைகளை, சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு தொடர் இனிதே நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 7ஆம் திகதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமானது.
கடினத்தரையில் நடைபெற்ற இப்போட்டியில், மகுடத்திற்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அஸ்லான் கராட்சேவ்வும் தென்னாபிரிக்காவின் லோயிட் ஹாரிசும் பலப்பரீட்சை நடத்தினர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை கராட்சேவ் 6-3 என கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், லோயிட் ஹாரிஸ், கராட்சேவ்வுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கிய கராட்சேவ், இரண்டாவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில், கராட்சேவ் பெற்றுக்கொண்ட முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.
அடுத்ததாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவாவும் மோதினர்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு கொண்டுச் சென்றது.
முதல் செட்டே டை பிரேக் வரை நீண்டது. சுவாரஸ்யமாக நகர்ந்த இந்த செட்டில் 7-6 என போராடி முருகுசா, செட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் முகுருசாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதில் ஆக்ரோஷமாக விளையாடிய முகுருசா, 6-3 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.
டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் முகுருசா, பெற்றுக்கொண்ட முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.