வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு, ஆனைக்கோட்டை ஜே/132 மற்றும் ஜெ/133 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.
அதில், இரண்டு கட்டங்களாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதி மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரைகுறை வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் ஒவ்வொருவரும் வேறு ஒருவர் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கொள்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை வழங்கும்போது தாங்கள் வசித்து வந்த தற்காலிக வீடுகளை இடித்துவிட்டே, குறித்த புதிய வீட்டுத் திட்டத்தினை மேற்கொண்டதாகவும், தற்போது வசிப்பதற்கு இடமின்றி வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் அரைகுறை வீடுகளில் வசித்து வருவதாகவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமக்குரிய நிலுவையாகவுள்ள நிதியை விரைவாகப் பெற்றுத்தருமாறு கோரியுள்ள மக்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் , தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கான தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.