காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்த முடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்துள்ளார்.
‘சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிசெய்யும் காணி பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள்’ என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாட்கள் செயலமர்வு இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ஆரம்பமானது.
உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இந்தச் செயலமர்வு ஆரம்பமானது.
செயலமர்வில், உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன், அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் எஸ்.தயா மற்றும் வளவாளர்கள் கலந்துகொண்டனர்.
பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படும் வழக்குகள், மத்தியஸ்த சபை ஊடாகத் தீர்த்துவைப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் நிலையில் குறித்த வழக்குகளை விரைவாகவும் சமூக முரண்பாடுகள் ஏற்படாமலும் தீர்த்துவைப்பதற்கு மத்தியஸ்த சபைத் தலைவர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான திறண் அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்தச் செயலமர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அனைத்து மத்தியஸ்த சபைகளைப் பலப்படுத்தி, அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அதன்மூலம் விரைவாகவும் சிறப்பாகவும் பயனடையும் வகையிலும் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமது அமைப்பு செயற்படவுள்ளதாக ஜானு முரளிதரன் தெரிவித்துள்ளார்.