யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம், அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
குறித்த கூட்டத்திலேயே இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள் நுழைவதும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் ஆகியனவும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
எனினும் அவசியத் தேவை, தொழில் நிமித்தம் காரணமாக வெளியே செல்கின்றவர்கள் தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய தினம் கூட 244 குடும்பங்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பெரும்பாளானோர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு, அபாய இடர் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.