இலங்கையில் முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இவ்வாறு அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக கொவிஷீல்ட் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக செலுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகள் போதுமானளவு இருக்கின்றது.
ஆகவே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு 2 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
இதேவேளை 6 மில்லியன் சைனோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகளும் சீனாவில் இருந்து நாளை நாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.