ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சீனாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் நேற்று (திங்கட்கிழமை) தொலைப்பேசி உரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறப்பான ஆதரவை இலங்கைக்கு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
இதன்போது இருநாடுகளின் நல்லுறவை மேம்படுத்தல், பொருளாதாரம், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஏனைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மிகவும் திருப்தியளிப்பதாகவும் விரைவாக அதனை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஸ்தாபக வருட விழாவுக்கு சீனாவுக்கு ஜனாதிபதி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.