புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் பொய்யான காரணங்களை முன்வைத்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மோசடி செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு துணைபோய் இருக்கின்றது என்பதே அர்த்தமாகும்.
மேலும் துறைமுகத்திலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்படும் அனைத்து பொருட்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள் பெரும்பாலான நாடுகளில் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் இது இலங்கையில் தற்செயலாக சிக்கியுள்ளது.
குறித்த எண்ணெய் சிக்கியிருக்காவிடின் மக்கள் இவற்றை பயன்படுத்தி இருப்பார்கள். ஏராளமானோர் நோயாளர்களாக மாறி இருப்பார்கள். ஆகவே இந்த விடயத்துக்கு பொய்யான காரணங்களை அரசாங்கம் ஒருபோதும் கூற முடியாது.
இதேவேளை குறிப்பாக அவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள், சந்தைக்குச் செல்ல அனுமதித்த குழுக்கள், அவை துறைமுகத்திலிருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டன, அவை எவ்வாறு கிடங்குகளுக்குச் கொண்டுச் செல்லப்படன ஆகியவை பெரிய கேள்விகளாகவே உள்ளன.
எனவே இவ்விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுபோன்ற மோசடிகளுக்கு அரசாங்கமும் துணைபோகும் என்றே எண்ணத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.