கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 500யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மியன்மாரில் இதுவரை பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை இராணுவம் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27ஆம் திகதி மட்டும் போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 114பேர் உயிரிழந்திருந்தமை நினைவுக்கூறத்தக்கது.
இதனிடையே, மியன்மாரில் கெய்ன் மாகாணத்தில் சுயாட்சி கோரி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரு கரேன் இனத்தவர்கள் மீது இராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்குள்ள கிராமத்தினர் காடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.