அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவர்கள் அதிகமாகவுள்ள மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளன.
கடந்த வாரம் தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு சராசரி விகிதம் 5.56 சதவீதமாக இருந்தது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 23 சதவீதமாக இருந்தது.
எல்லா மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும்.
மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனையை நடத்த வேண்டும். அத்தோடு ஆர்டி- பிசிஆர் பரிசோதனைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.