பிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலைமை உருவாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வேப்பவெட்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக மண்அகழ்வு இடம்பெறுவதாக கூறப்படுகின்ற பகுதியினை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளளார்.
இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் வேப்பவெட்டுவான் பகுதிக்கு வருகை தந்து நாம் பார்வையிட்டமைக்கும் தற்போது பார்க்கின்றபோது காணப்படுகின்ற நிலைமைகள் வித்தியாசமாக இருக்கின்றன.
அதாவது சட்டவிரோதமாக மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்த இடங்களை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கு மண் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என கேட்டால், எங்களை தகாத வார்த்தைகளினால் பேசி, அச்சுறுத்தும் விதமாக செயற்படுகின்றனர்.
இதேவேளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை முன்வைக்க முடியவில்லை என்றால், மாவட்ட அபிவருத்திக் குழுத் தலைவரும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் அவசியமற்ற ஒன்றாகவே பார்க்க தோன்றுகின்றது.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இந்த சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இல்லாவிடின் எமது பிரதேச மக்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.