குற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் ஆட்சிபீடம் ஏறிய எந்த அரசாங்கமும் இதுவரை எமக்கு நீதியை வழங்கவில்லை.
மேலும் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றே தொடர்ந்து கேட்டு வருகின்றோம். வேறு எதனையும் அரசாங்கத்திடம் நாம் கேட்கவில்லை.
அந்தவகையில் எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
மேலும் சர்வதேசம் எமக்கான நீதியை நிச்சயம் பெற்றுத் தரும் என நம்புகின்றோம்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது குறித்து எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் குற்றம் புரிந்தகுற்றவாளிகளிடம் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில் இலங்கையிடம் நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையினை சர்வதேசம் வழங்கியுள்ளமை வேதனை அளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.