சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில எதிர்பாராத செல்வாக்கு செலுத்தியவர்களிடமிருந்து கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் எனினும் அரசாங்கம் இதையெல்லாம் வெற்றிக்கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் உள்ளூர் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்கொடை சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பில் மிக முக்கியமான மைல்கல்லாகும் என்றும் சீன ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு இலங்கை அரசு சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் ஜயசுமன கூறியுள்ளார்.
இதேநேரம், இலங்கை அரசாங்கம் தனது தடுப்பூசி திட்டத்தில் சீன நாட்டினரை இணைக்க முடிவு செய்திருப்பதை சீன தரப்பு பாராட்டியதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர் குய் கூறியுள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசிகள் பெய்ஜிங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இலங்கைக்கான சீனாவின் தூதுவர் பெற்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக கைளித்தார்.
இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.