நுவரெலியா- இராகலை பிரதேசத்திலுள்ள குளத்துக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இராகலை- சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில், தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் உ. அபினேஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இராகலை- மந்திரிதென்னவிலுள்ள குளமொன்றில் நண்பர்களுடன் அவர் நீராடிக்கொண்டிருந்த வேளையில், சேற்றுக்குள் சிக்கி நீரிழ் மூழ்கியுள்ளார்.
இதன்போது ஏனையோர் குறித்த சிறுவனை மீட்பதற்கு முயன்ற வேளையில் இன்னொருவரும் அதில் சிக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஏனைய இருவரும் அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அறிவித்து, அவர்களுடன் இணைந்து இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு, வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில் முதலாவதாக சிக்கிய சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டபோது, மூன்று மணி நேரத்தின் பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதேவேளை ஏனைய இரு சிறுவர்களை தடுப்பு காவலில் வைத்து, இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.