நாட்டைக்கட்டியெழுப்பும்வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டைக்கட்டியெழுப்பும்வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்ட சிறு உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் அவர்களுக்கான சந்தை வசதிகளையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த சந்தை இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதி அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசாந்தன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் சி.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறுதொழில் முயற்சி பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பல்வேறு உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனையும் நடைபெற்றது.
புத்தாண்டு காலம் என்ற காரணத்தினால் மக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையிலும் இந்த உற்பத்தி சந்தை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.