கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை அமைப்பதற்காக சீன நிறுவனத்துடன் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு முயற்சியைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அரச மற்றும் தனியார் துறைப் பங்களிப்புடன் (PPP) புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
சீனாவின் China Merchants Port Holdings Company Limited நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமும், இலங்கை துறைமுக அதிகாரசபையும் (SLPA), Access Engineering PLC நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த கூட்டு முயற்சியைத் தொடர வேண்டாம் என பங்குதாரர்கள் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்திற்குள் நவீன தளவாட வசதியை உருவாக்கும் நோக்கில், South Asia Commercial and Logistics Hub (SACLH) என்ற கூட்டு நிறுவனமானது 2023ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த நிறுவனத்தில் சீனாவின் China Merchants Port Holdings நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் 70 சதவீத பங்குகளையும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் Access Engineering PLC ஆகியவை தலா 15 சதவீத பங்குகளையும் கொண்டிருந்தன.
இந்தத் திட்டத்திற்காக சுமார் 280 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவும், சுமார் 150,000 சதுர மீற்றர் பரப்பளவில் தளவாட வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
கொழும்புத் துறைமுகத்தின் தளவாடத் திறனை மேம்படுத்தி, பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் மற்றும் தளவாட மையமாக அதன் நிலையை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
எனினும், தற்போதைய வெளிப்புறச் சூழ்நிலைகள், வர்த்தக ரீதியிலான பரிசீலனைகள் மற்றும் பங்குதாரர்களின் நலன்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர், குறித்த கூட்டு முயற்சியைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிய ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளுக்கு உட்பட்டு, மூன்று பங்குதாரர்களும் தங்களது முதலீட்டுப் பங்களிப்புகளுக்கான பணத்தை மீளப் பெறவுள்ளனர்.
இதன்படி, சுமார் 29.8 மில்லியன் அமெரிக்க டொலர் மீளச் செலுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பங்குதாரரின் பங்களிப்புக்கு ஏற்ப இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய கூட்டு முயற்சி கைவிடப்பட்ட போதிலும், கொழும்புத் துறைமுகத்திற்குள் நவீன தளவாட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உரிய அனுமதிகளைப் பெற்று, போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பத்திர நடைமுறையின் ஊடாக அரச–தனியார் பங்காளித்துவ (PPP) மாதிரியில் புதிய தளவாட மையத்தை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்புத் துறைமுகத்திற்குள் கணிசமான நிலப்பரப்பைப் பயன்படுத்தி, துறைமுகம் சார்ந்த பல்வேறு தளவாடச் செயற்பாடுகள் மற்றும் மேலதிக பெறுமதி சேர்க்கும் சேவைகளை முன்னெடுக்கக்கூடிய ஒருங்கிணைந்த நவீன வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
இதன் மூலம், தற்போது கொள்கலன் மறுபரிமாற்ற மையமாகப் பெரும்பாலும் செயற்படும் கொழும்புத் துறைமுகத்தை, விரிவான கடல்சார் மற்றும் தளவாட மையமாக மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கப்பல் நிறுவனங்கள், சரக்கு உரிமையாளர்கள், தளவாடச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட சர்வதேச விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடைய தரப்பினருக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரச–தனியார் பங்காளித்துவ அணுகுமுறை தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கும், துறைமுகத்தின் நிலம் மற்றும் உட்கட்டமைப்பு வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு நீண்டகால நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்புத் துறைமுகத்தின் போட்டித்தன்மையை வலுப்படுத்துதல், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய, சர்வதேச வர்த்தகத்தில் அதன் பங்களிப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரசபையின் நீண்டகாலத் திட்டத்தில் இந்த ஒருங்கிணைந்த தளவாட மையம் முக்கிய இடத்தைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய கூட்டு முயற்சியைக் கைவிடுவது தளவாட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்பிலிருந்து விலகுவதைக் குறிக்காது எனத் தெரிவித்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபை, நாட்டின் பொருளாதார நலன்களுக்கும் துறைமுகத்தின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளுக்கும் பொருத்தமான வர்த்தக ரீதியாகச் சாத்தியமான, நிதி ரீதியாக நிலையான திட்டங்களை முன்னெடுக்கத் தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.













