தென்னாபிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
சென்சூரியன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 101 ஓட்டங்களையும் பாபர் அசாம் 94 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் மார்கிரம் 2 விக்கெட்டுகளையும் பெலுக்வாயோ மற்றும் ஸ்மட்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 321 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேன்மேன் மாலன் 70 ஓட்டங்களையும் கைல் வெர்ரெய்ன் 62 ஓட்டங்களையும் என்டில் பெலுக்வாயோ 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் மற்றும் ஷாயின் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பாபர் அசாமும், தொடரின் நாயகனாக பகர் சமானும் தெரிவுசெய்யப்பட்டனர்.