காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், ‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
இளவரசர் பிலிப்பின் மறைவு செய்தி கேட்டு தான், மிகவும் வருந்தியதாக பிரதமர் பொரிஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘இளவரசர் பிலிப் இங்கு ஐக்கிய இராச்சியத்திலும், பொதுநலவாய மற்றும் உலகெங்கிலும் தலைமுறைகளின் பாசத்தைப் பெற்றார்’ என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன், இளவரசர் பிலிப்பை இரண்டாம் உலகப் போரில் போராடிய கடைசி மக்களில் ஒருவராகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், இளவரசரின் மரணத்தால் தான் வருத்தப்படுவதாகக் கூறினார்.
இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.