இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான எடின்பர்க் டியூக் என்று அழைக்கப்படும் பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், அவரது மறைவு குறித்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன்படி,
அவுஸ்ரேலியா
எலிசபெத் மகாராணிக்கு நிலையான ஆதரவாக இருந்து வந்தவர் இளவரசர் பிலிப் எனவும் அவுஸ்ரேலியாவில் உள்ள டசின் கணக்கான அமைப்புகளுக்கு புரவலராக தலைமை தாங்கினார் என்றும் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொற் மொரிசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுவீடன்
பல ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தின் ஒரு சிறந்த நண்பராக பிலிப் இருந்தார் எனவும் இந்த உறவைத் தாம் மிகவும் மதிப்பதாகவும் சுவீடன் அரசர் கார்ல் குஸ்டஃப் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து
இளவரசர் பிலிப்பை மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதாகவும், அவர் தனது நீண்டகால வாழ்க்கையை பிரித்தானிய மக்களுக்கான சேவைக்காக அர்ப்பணித்தார் என நெதர்லாந்து அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிலிப்பின் உயிரோட்டமான ஆளுமை ஒரு அழியாத சுவடை ஏற்படுத்தியுள்ளது என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா
இளவரசர் பிலிப், தகுதியான காரணங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம்
இளவரசர் பிலிப்புடனான அன்பான சந்திப்புகளின் நினைவுகளை எப்போதும் போற்றுவதாக பெல்ஜியத்தின் ராணி மத்தில்டே தெரிவித்துள்ளார்.
மோல்டா
மோல்டாவை தனது வீடாக மாற்றி, அடிக்கடி வந்து சென்ற இளவரசர் பிலிப்பை இழந்ததில் வருத்தமடைவதாகவும் எமது நாட்டு மக்கள் எப்போதும் அவரது நினைவைப் பொக்கிஷமாகக் கருதுவார்கள் என்றும் மோல்டா பிரதமர் ரொபேர்ட் அபேலா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து
இளவரசர் பிலிப்பின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பிலிப்பின் ஹிலாரி விருது மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதை நினைவுகூர்ந்துள்ளார்.
கனடா
எங்கள் நாட்டின் சமூகத்திற்கும் உலகத்திற்கும் இளவரசர் பிலிப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்க்ல செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இளவரசர் பிலிப், பெரும் நோக்கமும் நம்பிக்கையும் கொண்ட மனிதர் எனவும், அவர் கடமை உணர்வால் மதிக்கப்பட்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
தனது உணர்வுகள் இளவரசர் பிலிப்பை இழந்துள்ள பிரித்தானிய மக்களுடனும், அரச குடும்பத்தினருடனும் இருப்பதாகவும், பிலிப் இராணுவத்தில் ஒரு தனித்துவமான திறமையைக் கொண்டிருந்ததுடன் சமூக சேவைகளில் ஆர்வமாக இருந்தார் என இந்தியப் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இஸ்ரேல்
இளவரசர் பிலிப், முழுமையான மக்கள் சேவையாளன் எனவும், இஸ்ரேலும் உலகமும் அவரை இழந்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.