போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கட்டார் மற்றும் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார மண்டலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து அதனை முன்னெடுக்குமெனவும் நிதி மற்றும் மூலதனச்சந்தை, அரச தொழில் முயற்சி சீர்த்திருத்தம் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு தூதுவராக ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அந்நாட்டு அதிகாரிகளுடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவர் இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலீடுகளின் சாத்தியமான பகுதிகளை அடையாளம் காண்பதற்காக இரு நாட்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் துறைமுக நகரம் தொடர்பான தற்போதைய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் இது நடக்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
















