யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவ கூடடத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை புனரமைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அப்போதைய வடக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோரின் முயற்சியினால், நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிய ‘நாளைய இளைஞர்கள்’ அமைப்பின் நிதிப் பங்களிப்பில் குறித்த நீச்சல் தடாகம் உருவாக்கப்பட்டது.
சுமார் இருபது மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக 2013 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட நீச்சல் தடாகம், ஆட்சி மாற்றங்களை தொடர்ந்து சீராக பராமரிக்கப்படாமல் காணப்படுகின்றது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சரினால் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.