மத்திய அரசின் விடயங்களை பிரதேச சபைகளில் பேசி சபையின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்காகவும் ஒருவர்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் பேசுவதை விடுத்து யதார்த்தமான விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதேச சபைகளின் வரையறைக்குள் இருந்து பேசுவதும் அதனை முன்னெடுப்பதுமே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (வியாழக்கிழமை) சபையின் உதவித் தவிசாளர் நடனசிகாமணி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான மாறுபட்ட செய்தியின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து கண்டன தீர்மானம் ஒன்று சபையின் எதிர்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பிலான விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனுசியா தெரிவிக்கையில், “இலங்கைக் கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது.
அது பலதரப்பட்டவர்களிடம் இருந்து வந்த ஆலோசனைகளில் ஒன்று. அதை தீர்மானமாக அவர் தெரிவிக்கவில்லை. இது தன்னிடம் கொண்டுவரப்பட்ட ஆலோசனை மட்டுமே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
அத்துடன், நடைமுறைப்படுத்த நினைக்கும் யோசனைகளாக முதலில் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களிடத்தில் முன்வைத்து, அதுதொடர்பாக விவாதித்து அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படும் உள்ளூராட்சி மன்ற சபைகளின் கூட்டத்தில் தேவையற்ற இந்த விடயத்தை விவாதத்திற்கு உட்படுத்துவது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே பார்க்கின்றேன்.
ஊடக செய்திக்காகவும் வாய்ப் பேச்சின் வீரத்தை சபையில் காட்டவதற்காகவும் சபையில் விவாதிக்காது சபையால் மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ள நிலையில் அவை தொடர்பாக ஆரோக்கியமான கருத்துக்களையும் தீர்மானங்களையும் கொண்டுவந்து விவாதிப்பதே சிறந்தது.
அத்துடன் மத்திய அரசின், அதுவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒரு நீண்டகால விடயத்தை எமது சபையில் கண்டனத் தீர்மானம் எடுப்பதனூடாக தீர்வு காணலாம் என்றால் வேடிக்கையாக உள்ளது.
எனவே, இவ்வாறான நேரத்தை வீணடிக்கும் பேச்சுக்களையும் கண்டனத் தீர்மானங்களையும் விட்டுவிட்டு எமது பிரதேச நலன்ட சார் விடயங்களை ஆலோசியுங்கள் அதுவே பிரதேச சபைக்கும் மக்களுக்கும் சிறந்ததாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.