கொழும்பு – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவர் அடங்கிய குழாமினால் ஐந்து நாட்களாக விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) விசாரணை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்றுக் கொள்கைக்கான கேந்திரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தகவல் தொழிநுட்பத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஜீ.கபில ரேணுக பெரேரா உள்ளிட்ட தரப்பினரால் கொழும்பு – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான, புவனெக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.