கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த விசேட நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய வீதிகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் ஆகியவற்றில் பயணிப்பவர்கள், உரிய முறையில் முகக்கவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தற்போது ஏற்பட ஆரம்பித்துள்ளமையை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.