இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (19.11.2026) இடம்பெற்றதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக் கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலபர் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகர் நா. சிவானந்தராஜா, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரின் இந்து மத இணைப்புச் செயலாளர் பாலஸ்ரீதரன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் சுலோக்சன் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
ஐயப்ப யாத்திரிகளுக்கான காப்புறுதி தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சாதகமானதாக இருந்து என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலின் போது யாத்திரிகர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக முன்வைக்குமாறும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்கப் புத்தசாசன அமைச்சு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும்இ யாத்திரிகர்களுக்கு எவ்வித இடஞ்சல்களும் சிக்கல்களும் ஏற்படாத வகையில் யாத்திரையை மேலும் இலகுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.














