அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதனை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிகுறிகள் ஏற்படாமல், நிமோனியா நிலைமையே பெரும்பாலானோருக்கு ஏற்படுகின்றமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேலதிகமான செயற்கை சுவாச கருவிகள் இதுவரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை.
இதேவேளை பெரும்பாலான மாவட்டங்களில் கொவிட் தடுப்பிற்கான மத்திய நிலையமும் அமைக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஜனாதிபதி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பூசியே தீர்வென்று தெரிவித்திருந்தார். ஆனால் தடுப்பூசிகளை கொண்டுவருவது தொடர்பாக சிறந்த வேலைத்திட்டம் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம், தங்களை விமர்சிப்பவர்களை கைது செய்வதில் மாத்திரமே அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
எனவே இத்தகைய செயற்பாடுகளை விடுத்து அனைத்து கட்சிகளுடன் ஒன்றிணைந்த கலந்துரையாடி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.