இந்திய கப்பற் படைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்கப்பல்களை சேர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் மறைந்திருந்து தாக்கும் எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஐ.என்.எஸ் விசாகப்பட்டிணம் ஆகிய கப்பல்கள் கப்பற்படையில் சேர்க்கப்படவுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் குறித்த கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும், ஐ.என்.எஸ் விசாகப்பட்டிணம் ஆகிய கப்பல்கள் இரண்டும் முறையே 45 ஆயிரம் டன், 7500 டன் எடை கொண்டவையாகும்.
டிசம்பர் நான்காம் திகதி அன்று இந்திய கப்பற்படை தினத்தில் குறித்த கப்பல்கள் இரண்டும் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று சீனக் கடற்படை மூன்று முக்கிய போர்கப்பல்களை சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் நிறுத்தியிருந்தது.
இதனையடுத்து இந்தியாவின் கப்பற்படையின் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.