மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன் மம்தா பானர்ஜி வெற்றி என அறிவிக்கப்பட்டிருந்தமை குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. தான் போட்டியிட்ட தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வியடைந்திருந்தாலும் கட்சி பெற்ற வெற்றியின் மகிழ்ச்சியை அவர் உற்சாகமாக மக்களோடு பகிர்ந்துகொண்டார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஊடகங்களினூடாக மக்களோடு உரையாடினார். ‘ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். வெற்றிப் பேரணிகளை நடத்த வேண்டாம் எனவும் ஒவ்வொருரையும் உங்களுடைய வீடுகளுக்குச் செல்லும்படியும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நமது முன்னுரிமை கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான். இது வங்காளத்திற்கான வெற்றி. வங்காளத்திலேயே இது சாத்தியப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அதிலிருந்து எழுந்து சில அடி தூரம் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தான் போட்டியிட்ட தொகுதியில் அவர் தோற்றிருந்தாலும் முதல்வராகப் பதவியேற்று ஆறு மாதங்களுக்குள் ஏதாவதொரு தொகுதியில் இடைத் தேர்தலை நடத்தி வெற்றிபெற்று முதல்வர் பதவியை அவர் தக்கவைத்துக்கொள்ள இயலும். 2011 இல் அவர் முதல் முறை முதலமைச்சராகப் பதவியேற்றபோது மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டிருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர் பாபனிபூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.