புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார்.
அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும் ஏழு அல்லது ஒன்பதாம் திகதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதுடன் இதில், 81.70 வீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆறு மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்று முடிவுகள் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பா.ஜ.க. ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இதே கூட்டணியில் ஐந்து இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. அத்தனை இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இரு இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சி தி.மு.க. ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், 16 இடங்களைக் கைப்பற்றியுள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியி்ல ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.