ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைற் (Sputnik Light) தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை ஏனைய தடுப்பூசிகள் போல இரண்டு தடவை போடத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு தடவை செலுத்தப்படும் மருந்தில், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 79.4 சதவீதம் வெற்றிகரமாக செயற்படுவதாக மனிதர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து வகையான கொரோனா வைரஸின் உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்தத் தடுப்பூசி சிறப்பாக வேலைசெய்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சீரான அளவில் இருப்பதாக ஆய்வுகளை மேற்கொண்ட ரஷ்யாவின் நுண்கிருமிகள் மற்றும் தொற்று ஆய்வுக்கூடத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பேர்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி உலக அளவில் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.