முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வாரம் மே 12 தொடக்கம் மே 18வரை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தங்களது வீடுகளிலேயே விளக்கேற்றி அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
மேலும் தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கான நீதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவே கிடைக்க வேண்டும். வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை, நினைவுகூருவதன் ஊடாகவே நீதியை எம்மால் பெற முடியும்.
ஆகவேதான் பொறுப்புமிக்க கட்சி என்பதற்கமைய நினைவுதினத்தினை அனுஸ்டிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.