கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹொங்கொங்கிற்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தைச் சமாளிக இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்த மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அவற்றுக்கான விலையை அதிகம் உயர்த்தாமல் நிலையாக வைத்திருக்க சீன நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதற்காக சீன அரசின் ஆதரவு தேவை.
சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயக் கொள்கையில் அரசு எந்த அளவுக்கு தலையிட முடியும் என்பது தெரியவில்லை. எனினும் இந்த விடயத்தில் சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் சீனா சரக்கு விமான போக்குவரத்தை நிறுத்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சரக்கு போக்குவரத்தில் விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.