முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது மக்களுக்காக ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடம் அடையாள அட்டையை பொலிஸார் கேட்டுள்ளனர்.
இதன்போது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை அவர்கள் வழங்கியபோது அது பயனில்லை என்றும் தேசிய அடையாள அட்டையை தருமாறு கேரியுள்ளனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் தேசிய அடையாள அட்டையை கொடுத்தபோது இன்றைய தினம் நீங்கள் வெளியில் செல்ல முடியாது உங்களை கைது செய்ய வேண்டி வரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்பின்னர் ஊடகவியலாளர்களை கடும் தொனியில் எச்சரித்த பொலிஸார் சிறிது நேரத்தின் பின்னர் உட்செல்ல அனுமதித்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.