இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான ஜலஜா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், மருத்துவர்கள் ஓய்வின்றி இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். இதன்காரணமாக அவர்கள் மிகுந்த மன உளைச்சலை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
பட்டம் பெற்று புதிதாக பணியில் சேர்ந்த இளம் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் இந்தப் பெரும் தொற்றால் ஏற்படும் மரணங்களைக் கண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமிக்க மூத்த மருத்துவர்கள் கூட வாழ்நாளில் இவ்வளவு மரணங்களை பார்த்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் மாத்திரம் 244 மருத்துவர்கள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.