வவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் தெரிவித்தார்.
வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயின் சமகால நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலாளர் பிரிவு அதிகமான மக்கள் தொகையை கொண்டமைந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் தொற்று அதிகரிக்கும் ஆபத்தான நிலைமை உள்ளது. அந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் அதிக மக்கள் தொகையினைக் கொண்ட 12 கிராம சேகவர் பிரிவுகள் தொடர்பாக நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்.
அத்துடன் இறப்புக்களை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்திருக்கின்றோம்.
இதேவேளை 152 கட்டில் வசதிகள் தற்போது இருக்கின்றது. விரைவில் 200 ஒக்சிசன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்ப்படுத்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.
குறிப்பாக அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளரை பராமரிப்பதற்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரையில் ஒருநாளில் செலவாகும்.
கடந்த நாட்களை போல இல்லாமல் எதிர்வரும் 100 நாட்களில் பரவல் விகிதம் அதிகமாக இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையும் நாம் எடுத்துள்ளோம்.
அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பொலிஸாரின் எண்ணிக்கையினை அதிகரித்து வழங்க வேண்டும் என்று பொலிஸ் திணைக்களத்திடம் கேட்டுகொள்கின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.