இலங்கைக் கிரிக்கெட் சபையின் புதிய சம்பள விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இலங்கைக் கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.
24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் அறிவித்தது இலங்கை கிரிக்கெட் சபை. புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில் முறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட 24 வீரர்களும் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இது நியாயமற்ற, வெளிப்படைத்தன்மையில்லாத ஒப்பந்தம். எனவே இதில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை. வீரர்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம். புதிய விதிமுறையின்படி ஒவ்வொரு வீரரும் எத்தனை புள்ளிகள் சேர்த்துள்ளார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். இதே நிலைமையில் உள்ள இதர நாட்டு கிரிக்கெட் சபைகளைச் சேர்ந்த வீரர்களின் சம்பளத்தை விடவும் எங்களுடைய சம்பளம் மூன்றிலொரு பங்காகவே உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆயினும், ஜூன் 3 ஆம் திகதிக்குள் அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.