வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர மியான்மரின் றோமன் கத்தோலிக்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற மோதலில் முக்கியமாக தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு மியான்மரில் ஷான் மற்றும் கயா மாநிலங்களின் எல்லைக்கு அருகில் படையினருக்கும் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த மோதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பேராயர், தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை நாங்கள் மிகுந்த துக்கத்தோடும் வேதனையோடும் பதிவு செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தின் எல்லையில் உள்ள கயா மாநிலத்தின் தலைநகரான லோய்காவ் மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலின் போது பெரும் சேதத்தை சந்தித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.