பிரதி மன்றாடியார் நாயகமாகச் செயற்பட்டுவந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ள அவர், இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபர் ஆவார்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த 24ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதுடன், இதற்குமுன்னர் சஞ்சய் ராஜரத்தினத்தை புதிய சட்டமா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றப் பேரவைக்குப் பரிந்துரைத்தார்.
இதற்கமைய, இவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றப் பேரவை இணக்கம் வெளியிட்டிருந்தது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 வருடங்கள் சேவையாற்றியுள்ள சஞ்சய் ராஜரத்தினம், அரச சட்டத்தரணியாகவும் பிரதி மன்றாடியார் நாயககவும் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் பதில் மன்றாடியார் நாயகமாகவும் பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், கொழும்பு சென்பீற்றர்ஸ் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சஞ்சய் ராஜரத்தினம், லண்டனில் குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருந்ததுடன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சொலிசிட்டராகக் கடமையாற்றியுள்ளார்.
இதனைவிட, இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவுப் பிரிவு உட்பட அரச நிறுவனங்கள் சிலவற்றின் ஆலோசகராகப் பதவி வகித்துவந்துள்ள சஞ்சய் ராஜரத்தினம் இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சட்டக் கல்விப் பேரவையின் உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.