2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை குறைந்து வரும் வேளையில், இந்த ஆண்டில் அதற்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் 2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதி சந்தை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் இலங்கையர்கள் சாதனை அளவில் 360,117 வாகனங்களை இறக்குமதி செய்தனர்.
தொற்றுநோய் காலத்தில் உலகளாவிய நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்ததால், வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணியைச் சேமிக்க, வாகன இறக்குமதி சந்தை 2020 மார்ச் மாதம் மூடப்பட்டது.
பணம் அனுப்புவது வெகுவாகக் குறைந்தது, சுற்றுலாத் துறையும் நலிவடைந்தது, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில் நாட்டிற்கு குறைந்தது 20 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணய இழப்பு ஏற்பட்டது.
2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மந்தநிலை இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட செலவினம் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக
1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டாலும், வெளித்துறையில் ஏற்படும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
இலங்கையில் வாகனங்கள் தயாரிக்கப்படாவிட்டாலும், இறக்குமதியிலிருந்து விற்பனை வரை இறுதி வாடிக்கையாளருக்கு சேர்க்கப்படும் அனைத்து மதிப்பும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.













