“தமிழ்நாடு சிறைவிதிகள் 1983 இன் அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து தகுதியுள்ள சிறைவாசிகளை உடனே விடுவிக்க வேண்டும்” எனத் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (29.05.2021) அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :
“ தமிழ்நாடு சிறை விதிகள் 1983 இல் விதி 313 முதல் 333 வரை சிறைவாசிகளுக்குத் தண்டனைக் குறைப்பு ( Remission) வழங்கும் அதிகாரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற எந்த ஒரு சிறைவாசியும் நன்னடத்தை மற்றும் சிறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் தண்டனை குறைப்புக்குத் தகுதியானவர் ஆவார்.
சிறை விதி 319 ஆண்டொன்றுக்கு சாதாரணமாக 15 நாட்கள் தண்டனைக் குறைப்பு செய்யப்படவேண்டும் என வரையறுத்துள்ளது. சிறை விதி 329 ஒரு சிறைவாசியின் மொத்த தண்டனைக் காலத்தில் நான்கில் ஒரு பங்கை நன்னடத்தை அடிப்படையிலும்,குருதிக் கொடை மற்றும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும் சிறை அதிகாரிகள் குறைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது. அரசாங்கம் விரும்பினால் ஒரு சிறைவாசியின் தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை குறைக்கவும் அந்த விதி அனுமதி அளித்துள்ளது.
தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறை விதிகளின்படி கிடைக்கவேண்டிய தண்டனைக் குறைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லையென்று தெரியவருகிறது. அவ்வாறு தண்டனைக் குறைப்பு வழங்கியிருந்தால் தற்போதுள்ள சிறைவாசிகளில் சுமார் 300 முதல் 400 பேர் வரை விடுதலை பெற்றுச் சென்றிருப்பார்கள்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ,தமிழ்நாடு சிறை விதிகளின்படி சிறைவாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைக் குறைப்பை வழங்கி தகுதியான சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்வதற்குத் தாங்கள் கருணையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.” என ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.