மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று (சனிக்கிழமை) முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஐயாயிரம் பேர் பணிபுரிந்துவரும் குறித்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் அதிகளவான ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கடந்த 26ஆம் திகதி ஆடைதொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதுடன் எதிர்வரும் 31ஆம் திகதி திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
எனினும், கடந்து இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 157 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து ஆடைத் தொழிற்சாலை முகாமையாளருடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியர் மயூரன், தொழிற்சாலையை வரும்ஆறாம் திகதிவரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலயத்தில் 123 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து 397ஆக அதிகரித்துள்ளதாகவும் 26 பேர் மரணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.