யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் தடுப்பூசியை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோ தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு வருகை தர வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.