அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் 6 ரில்லியன் டொலர் மதிப்புள்ள 2022 நிதியாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
கல்வி, சுகாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றிற்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் இராணுவ மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1.52 ரில்லியன் டொலர் உட்பட சமூக திட்டங்கள், ஊதியம் பெற்ற குடும்ப விடுப்பு போன்ற ஜனாதிபதியின் திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும் நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அரசாங்கச் செலவீனம் உயர்நிலையை எட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விரிவாகப்பட்ட சமூகப் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு அந்தப் பரிந்துரை உறுதியளிக்கிறது.
மேலும் மற்ற நாடுகளுடனான அமெரிக்காவின் போட்டித்தன்மையைக் கட்டிக்காக்க அது அவசியம் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் மற்றும் உச்ச வருமானம் ஈட்டுவோர் மீதான வரிகளை உயர்த்துவதன் மூலம் வரவுசெலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க முடியும் என வரவு செலவுத்திட்டம் கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்தப் பரிந்துரையால் வட்டி விகிதமும் பணவீக்கமும் உயரக்கூடும் என தெரிவித்து ஜனாதிபதி பைடனின் பரிந்துரைக்குக் குடியரசுக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.