கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியாவின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம் ஸஹாவி தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததன் மூலம்தான் வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கியது என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது என பிரித்தானியாவின் உளவு அமைப்புகள் நம்புவதாக ‘சன்டே டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் பிரித்தானியாவின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம் ஸஹாவி கூறுகையில், ‘கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பால் முழுமையாக விசாரிக்க முடியும். பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது.
அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப பரவல் குறித்து நன்கு புரிந்துகொள்ள முடியும்’ என கூறினார்.
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.
ஆனால், வூஹானில்தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் உலகின் வேறுபட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்பது சீனாவின் வாதம்.