நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில், மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் மக்கள், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வங்கி மற்றும் நிதி நிருவன சேவையும் நடைபெறுகின்றமையினால், மக்களின் நடமாட்டம் தொடர்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘சதொச’ மற்றும் ‘காகில்ஸ் புட்சிட்டி’ போன்ற விற்பனை நிலையங்களில் உணவு பொருட்களின் தற்போதைய நிலை தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று ஆராய்ந்தார்.
மேலும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக குறித்த நிறுவன அதிகாரிகளை தொலைபேசி ஊடாக தொடர்புக்கொண்டு பேசிய அவர், பொருட்களை வீடுகளில் இருந்தே பாதுகாப்பான முறையில் பெற்று கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.