ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவந்து மேலும் மூவாயிரம் பேர் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய பாதுகாப்புத் துறை செயலர் பென் வாலஸ் கூறுகையில், ‘மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறும் நிலையில், நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து அதிகரித்துள்ளது.
பிரித்தானிய படைகளுக்கு உதவுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்தவர்களுடன் நிற்பதுதான் சரியானது. எங்களை கவனித்துக் கொள்வதற்காக அவர்கள் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளனர். இப்போது அதையே நாங்கள் செய்யப் போகிறோம்’ என கூறினார்.
நியூயோர்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா, நேட்டோ படைகளுடன் ஆப்கானிஸ்தானை ஆண்டு கொண்டிருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. இதில், 2001ஆம் ஆண்டு போரின் ஆரம்பத்தில் பத்தாயிரம் பிரித்தானிய படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா தனது போர் நடவடிக்கைகளை 2014ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டாலும், ஆப்கான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரித்தானியா படையினர் 750 பேர் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். அமெரிக்கா, நேட்டோ படையினருடன் சேர்ந்து மீதமுள்ள பிரித்தானிய படையினரும் செப்டம்பருக்குள் நாடு திரும்பவுள்ளனர்.