நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவி வருகின்ற நிலையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது களுத்துறை மாவட்டத்திலுள்ள இங்கிரிய, பாலிந்தநுவர, புலத்சிங்கள, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வலலாவிட்ட, ஹொரண பிரதேச செயலகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன
இதேபோன்று இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அயகம, கிரியெல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, நிவித்திக ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் எஹலியகொட, கலவான ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு மாவட்டத்திலுள்ள சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் மாத்தறை மாவட்டத்திலுள்ள பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.