மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை என மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியான தகவலினை தொடர்ந்து மன்னாரிலுள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முன்டியடித்துக் கொண்டனர்.
எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பாலுள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்த நிலையிலேயே மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கற்றுக்களை கொள்வனவு செய்ய மக்கள் முன்டியடித்ததோடு, மக்கள் தமக்கு தேவையான உப்பு பக்கற்றுக்களையும் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முன்டியடித்துக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும், தற்போது அதிக அளவு உப்பு கையிறுப்பில் உள்ளதோடு, பெரும்போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம்பெற்று வருவதாக மன்னாரிலுள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.