அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒன்று கூட்டுனர் அருண் ஹேமசந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்.
திருகோணமலையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபாய் நிவாரண தொகையான கொடுப்பனவு மூதூர் பகுதியில் வழங்கப்படும் போது அங்கு மொட்டு கட்சியின் உறுப்பினர் ஒருவர் அதனை வழங்கியதாக புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோத செயற்பாடாகும்.
மேலும், இந்த 5000 ரூபாய் கொடுப்பனவில் பல முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளன. சமூர்த்தி பயனாளிகளை பொருத்தவரை குறித்த 5000 ரூபாயிலிருந்து அவர்களது சமூர்த்தி தொகையானது கழிக்கப்பட்டு எஞ்சிய தொகையே மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
மோசமான பெருந்தொற்று நிலவுகின்ற காலப்பகுதியில் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் கொடுப்பனவுகளில் பல வகையான முறைகேடுகள் இடம்பெறுகின்றன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.