நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேநேரம், 10 மாவட்டங்களின் 87 பிரதேசங்களிலுள்ள 52 ஆயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளானவர்களில் 5 ஆயிரத்து 360 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 5 ஆயிரத்து 710 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 164 பேர் தங்களது உறவினர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் நாளையும் தற்காலிகமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.